21 வயது பையனால் மாறிய ஆட்டம்... ஷிகர் தவான் அடித்தும் பஞ்சாப் தோல்வி...

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து பஞ்சாப் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் காயம் காரணமாக லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார். இதனால் கேப்டன்சி பொறுப்பை நிக்கோலஸ் பூரன் எடுத்து கொண்டார். இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

தன்பின் பஞ்சாப் அணி சார்பாக ஷிகர் தவான் - பேர்ஸ்டோவ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இவர்கள் இருவரும் லக்னோ அணியின் பவுலர்களை வெளுத்து கட்டினர். குறிப்பாக பவர் பிளேவில் ஸ்பின்னரை வைத்து அட்டாக் செய்தது தவறு என்று பதிலடி கொடுக்கும் வகையில் சித்தார்த் மணிமாறன் பவுலிங்கில் ஷிகர் தவான் பொளந்து கட்டினார். இதனால் பவர் பிளே ஓவர்களில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் குவித்தது.

சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் 30 பந்துகளில் அரைசதம் அடிக்க, பஞ்சாப் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதனால் 11 ஓவர்களில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 101 ரன்களாக இருந்தது. இந்த நிலையில் லக்னோ அணியின் அறிமுக வீரர் மயங்க் யாதவ் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் 156 கிமீ வேகத்தில் வீசி மிரட்டினார். இவர் வீசிய 12வது ஓவரில் பேர்ஸ்டோவ் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து இவர் வீசிய 14வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் 19 ரன்களில் வெளியேற, ஆட்டத்தில் லக்னோ அணியின் கைகள் ஓங்கியது. பின்னர் வந்த அதிரடி வீரர் ஜித்தேஷ் சர்மாவும் மயங்க் யாதவ் பவுலிங்கை அட்டாக் செய்ய நினைத்து 6 ரன்களில் வெளியேறினார். தொடர்ச்சியாக 4 ஓவர்களை வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மயங்க் யாதவ், ஆட்டத்தையே லக்னோ அணி பக்கம் திருப்பினார். தொடர்ந்து மோசின் கான் வீசிய 17வது ஓவரில் ஷிகர் தவான் 70 ரன்களிலும், சாம் கரன் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர்.

இதனால் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 56 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த சூழலில் நவீன் உல் ஹக் வீசிய 18வது ஓவரில் 8 ரன்களும், க்ருனால் பாண்டியா வீசிய 19வது ஓவரில் 7 ரன்களும் சேர்க்கப்பட்டன. இதனால் கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. நவீன் உல் ஹக் வீசிய கடைசி ஓவரில் 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்து பஞ்சாப் அணி தோல்வியடைந்தது. இதனால் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

சிறப்பாக பவுலிங் செய்த மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் வீசிய 24 பந்துகளில் 12 டாட் பால்களையும் வீசி அசத்தினார். அதேபோல் மோசின் கான் 4 ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலமாக லக்னோ அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.